ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் போராடி கடைசி பந்தில் இந்திய அணி வெற்றியை பறிகொடுத்தது. 

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 5 ரன்களில் வெளியேற, அதன்பிறகு ராகுலும் கோலியும் சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஆனால் அவசரப்பட்ட கோலி ஸாம்பாவின் பந்தை தூக்கி அடித்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரிஷப் பண்ட் ஒரு ரன்னில் ரன் அவுட்டாக, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் அரைசதம் அடித்ததும் 50 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அதன்பிறகு தினேஷ் கார்த்திக் மற்றும் குருணல் பாண்டியா ஆகிய இருவரும் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தோனி நிலைத்து நின்றார். ஆனாலும் அதனால் பலனில்லை. டெத் ஓவர்களில் தோனியை ரன் அடிக்கவிடாமல் கட்டுக்கோப்பாக வீசினர் ஆஸ்திரேலிய பவுலர்கள்.

முதல் 10 ஓவர்களில் 80 ரன்களை குவித்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் வெறும் 126 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது. கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்தது. 

127 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகள் விரைவிலேயே விழுந்துவிட்டன. தொடக்க வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸை உமேஷ் யாதவ் அபாரமான த்ரோவால் ரன் அவுட் செய்தார். அதன்பிறகு களத்திற்கு வந்த கேப்டன் ஃபின்ச்சை பும்ரா முதல் பந்திலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார். 

5 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், மூன்றாவது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல்லும் டார்ஷி ஷார்ட்டும் இணைந்து 84 ரன்களை சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப் அந்த அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்கை அடித்து ஆடிய மேக்ஸ்வெல், அரைசதம் அடித்தார். 56 ரன்களில் மேக்ஸ்வெல்லை சாஹல் வீழ்த்தினார். அதன்பிறகு ஷார்ட் ரன் அவுட்டாக, அதற்கடுத்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. 

மேக்ஸ்வெல், ஷார்ட்டின் விக்கெட்டுகளுக்கு பிறகு அந்த அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்திய இந்திய பவுலர்கள் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 18வது ஓவரை மார்கண்டே அருமையாக வீசினார். கடைசி இரண்டு ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரை வீசிய பும்ரா, வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அந்த ஓவரில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

19வது ஓவரை அபாரமாக வீசி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியதோடு இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கினார் பும்ரா. ஆனால் பும்ரா ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்பை கடைசி ஓவரில் மொத்தமாக நாசகமாக்கினார் உமேஷ் யாதவ். கடைசி ஓவரில் ரன்களை வாரி வழங்கினார்.

கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் 1 ரன்னும் இரண்டாவது பந்தில் பவுண்டரியும் கொடுக்க, 4 பந்தில் 9 ரன்களை தேவைப்பட்ட நிலையில், மூன்றாவது பந்தில் பவுலருக்கு சற்று பின்னால் மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு ரிச்சர்ட்ஸனும் கம்மின்ஸும் இரண்டு ரன்கள் ஓடினர். அதன்பிறகு ஐந்தாவது பந்தில் பவுண்டரி மற்றும் கடைசி பந்தில் 2 ரன்கள் என இலக்கை எட்டி திரில் வெற்றி பெற்றது இந்திய அணி. 

கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் அருகில் தட்டிவிட்டு அவர்கள் இரண்டு ரன்கள் ஓடினர். அதை உமேஷ் யாதவே ஓடிச்சென்று பிடித்திருந்தால் ஒரு ரன்னில் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் அந்த பந்தை உமேஷ் யாதவ் பிடிக்க முற்படவேயில்லை. மிட் ஆஃப் திசையில் நின்ற ஃபீல்டர் ஓடிவந்து எடுத்தார். ஒருவேளை அந்த ஒரு ரன்னை கட்டுப்படுத்தியிருந்தால் கூட போட்டியின் முடிவு மாறியிருக்கக்கூடும். ஆனால் கடைசி ஓவரை வீசிய உமேஷ் யாதவ், போட்டி முடிவதற்கு முன்பாகவே மனதளவில் தோற்றுவிட்டார். அதுதான் தோல்விக்கும் ஒரு முக்கிய காரணம். கடைசி பந்தில் அவர்கள் 2 ரன்கள் ஓடும்போது கூட பெரிய பரபரப்போ பதற்றமோ இல்லாமல் ஃபீல்டர் தூக்கி வீசிய பந்தை மிகவும் கேசுவலாகத்தான் பிடித்தார். குறைந்த பட்சம், மூன்றாவது பந்தில் அந்த ஒரு ரன்னை கட்டுப்படுத்தியிருந்தால் கூட போட்டியின் முடிவு மாறியிருக்கலாம்.