U-17 World Cup Spain defeated strong France and advanced to quarterfinals

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி குவாஹாட்டியில் நேற்று நடைபெற்றது.

இதன் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் ஸ்பெயின் அணி மற்றும் பிரான்ஸ் அணி மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின். 

இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் அரை மணி நேரம் கோல் இல்லாமலே போனது. பின்னர், 34-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் அமைன் கோய்ரி வசம் சென்ற பந்தை அவர், லென்னி பின்டார்ஸýக்கு கடத்தினார். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பின்டார்ஸ் கோலாக்கினார். 

அடுத்த 10-வது நிமிடத்தில் பிரான்ஸக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோல் கம்பத்தின் வலது புறத்தில் இருந்து ஃபெரான் டோரஸ் பந்தை கிராஸ் செய்ய, அப்போது கோல் கம்பத்தை நோக்கி விரைந்த ஜுவான் மிரான்டா அதனை கோலாக்கினார்.

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. 

ஸ்பெயின் அணி 2-வது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடியது. 89-வது நிமிடம் வரை கோல் விழாததால் இந்த ஆட்டம் சமனாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில் ஸ்பெயினுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கேப்டன் அபேல் ரூயிஸ் கோலாக்கினார். இதனால் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை தோற்கடித்தது.

ஸ்பெயின் தனது காலிறுதியில் ஈரான் அணியை எதிர்கொள்கிறது.