நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் பேட்டிங் ஆடும்போது, அவரது கால் நகர்த்தல்களை பார்த்து ரோஹித் சர்மா பயங்கரமாக சிரித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கத்தால் சுவாரஸ்யமே இல்லாமல் ஒரு சார்பான போட்டியாக அமைந்தது. 

சொந்த மண்ணில் பெரும்பாலான போட்டிகளில் 300க்கும் அதிகமான ரன்களை அடித்து மெகா ஸ்கோரை குவிக்கும் நியூசிலாந்து அணி, நேற்றைய போட்டியில் இந்திய அணியிடம் எந்தவித சவாலுமின்றி சரணாகதி அடைந்தது. வெறும் 157 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த இலக்கை இந்திய அணி எளிதாக எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின் போது, டெயிலெண்டரான டிரெண்ட் போல்ட்டின் கால் நகர்த்தல்களை பார்த்து ரோஹித் சர்மா அடக்க முடியாமல் சில நிமிடங்கள் சிரித்தார். கடைசி வீரராக களமிறங்கிய போல்ட், சாஹல் வீசிய பந்தை இறங்கி வந்து அடிக்க நினைத்தார். பின்னர் அந்த பந்தை எப்படியாவது அவுட்டாகிவிடாமல் தடுத்தால் போதும் என்ற நிலையில், தட்டுத்தடுமாறி தடுத்துவிட்டார். அப்போது அவரது கால் நகர்த்தல்கள் செம காமெடியாக இருந்தது. அதைக்கண்டு ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ரோஹித் சர்மா, அடக்க முடியாமல் சிரித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.