இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் பேட்டிங் வரிசையை தனது அபாரமான வேகப்பந்து வீச்சாள் சரித்துள்ளார் நியூசிலாந்து பவுலர் டிரெண்ட் போல்ட். 

இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 178 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணிக்கு பதிலடி கொடுத்தது நியூசிலாந்து அணி. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணதிலகா, கருணரத்னே மற்றும் தினேஷ் சண்டிமால் ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இவர்கள் மூவரையும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சௌதி வெளியேற்றினார். 

இவர்களை அடுத்து குசால் மெண்டிஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணியின் ரோஷன் சில்வா, மேத்யூஸுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறிது நேரம் களத்தில் நிலைத்து நின்றார். ஆனால் ரோஷனை 21 ரன்களில் டிரெண்ட் போல்ட் வீழ்த்தினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி அதிகபட்சமாக 43 ரன்களை சேர்த்தது. 

ரோஷனின் விக்கெட்டுக்கு பிறகு இலங்கையின் பேட்டிங் வரிசையை மளமளவென சரித்தார் போல்ட். 37வது ஓவரின் 4வது பந்தில் ரோஷனை வீழ்த்திய போல்ட், அடுத்து அவர் வீசிய 14 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். 94 ரன்களில் 5வது விக்கெட்டை இழந்த இலங்கை அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஒருமுனையில் மேத்யூஸை நிறுத்திவிட்டு மறுமுனையில் இலங்கையின் பின்வரிசை பேட்டிங்கை சரித்தார் போல்ட். 15 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்தார் டிரெண்ட் போல்ட். 

74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை கடந்து ஆடிவருகிறது.