Today begins in Bhubaneswar Hockey World League Conflict with India - Australia

ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் ஹாக்கி உலக லீக் இன்றுத் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது இந்தியா.

உலகின் சிறந்த எட்டு நாடுகளின் அணிகள் பங்கேற்கும் ஹாக்கி உலக லீக் போட்டியில் 'பி' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் இணைந்துள்ளன. 'ஏ' பிரிவில் ஆர்ஜென்டீனா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய அணியை பொருத்த வரையில் இந்த ஆண்டில் ஆசிய கோப்பையை கைப்பற்றிய உத்வேகத்துடன் களம் காண்கிறது. எனினும், உலகின் 2-ஆம் நிலை அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் குறைந்த வெற்றிகளையே பதிவு செய்துள்ளது.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான ஜோர்ட் மாரிஜ்னே பொறுப்பேற்ற பிறகு, ஆசிய கோப்பையை வென்றுள்ள போதிலும், இந்த ஹாக்கி உலக லீக் போட்டியே அவருக்கான சோதனைக் கட்டமாகும்.

ஜோர்ட் மாரிஜ்னே நியமனத்தின்போது, ஆசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் இந்திய அணி தடம் பதிக்க வேண்டும் என தேர்வுக் குழு அறிவுறுத்தியிருந்தது. மாரிஜ்னே பொறுப்பேற்ற பிறகு அணியில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வீரர்கள் தாங்கள் விருப்பப்படும் பானியில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, உலகக் கோப்பை என அடுத்தடுத்து முக்கியமான போட்டிகள் வருவதால், இந்திய அணி தற்சோதனைக்கு உட்படுத்த இந்த உலக ஹாக்கி லீக் சரியானதாக இருக்கும்.

அணி வீரர்களைப் பொருத்த வரையில் வீரர்களான ரூபிந்தர் பால் சிங், வீரேந்திர லக்ரா ஆகியோர் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளனர். அவர்களுடன், ஜூனியர் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஹர்மன்பிரீத் சிங், சுமித், டிப்சன் திர்கி, குர்ஜந்த் சிங் ஆகிய இளம் வீரர்களும் உள்ளனர்.