திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் சொந்த ஊரில் பெயரை மகளிர் பிரிவில் கலந்து கொண்ட திருநெல்வேலி அணி காப்பாற்றியது. ஆடவர் பிரிவில் திருநெல்வேலி அணியைத் தோற்கடித்து தேனி அணி முதலிடம் பிடித்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், திருநெல்வேலி பிரிவு சார்பில் 2016 – 17-ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான அரசு ஊழியர்களுக்கான கூடைப்பந்துப் போட்டிகள் பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் மார்ச் 28, 29, 30 ஆகிய மூன்று நாள்கள் மின்னொளியில் நடைபெற்றன.

இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற அணிகள் கலந்து கொண்டன.

ஆடவர் பிரிவில் சென்னை, தருமபுரி, தேனி, தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், வேலூர், ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய 16 மாவட்ட அணிகள் கலந்து கொண்டன.

மகளிர் பிரிவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, ஈரோடு, திருச்சி, திருவாரூர், திண்டுக்கல் ஆகிய 7 மாவட்ட அணிகளும் கலந்து கொண்டன.

நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் தேனி அணி, திருநெல்வேலி அணியை வீழ்த்தியது.

தஞ்சாவூர் மாவட்ட அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

அதேபோன்று, மகளிர் பிரிவில் திருநெல்வேலி மாவட்ட அணி முதலிடம் பிடித்தது.

தூத்துக்குடி மாவட்ட அணி இரண்டாம் இடம் பிடித்தது. ஈரோடு மாவட்ட அணி மூன்றாம் இடத்தை பிடித்தது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன், முதலிடம் பிடித்த அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகளும், இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு கேடயமும், சான்றிதழ்களும் வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம், கூடைப்பந்து விளையாட்டுப் பயிற்றுநர்கள், நடுவர்கள், திருநெல்வேலி மாவட்ட கூடைப்பந்துக் கழகத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.