time will come for ishan and pant said former indian captain ganguly
இளம் வீரர்கள் இஷான் கிஷான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு கிரிக்கெட்டில் சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும், இந்திய அணியில் இடம் கிடைப்பதற்கு சற்று காத்திருக்க வேண்டும் எனவும் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
நடந்துவரும் ஐபிஎல் 11வது சீசனில் இளம் வீரர்கள் இஷான் கிஷான், ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் அதிரடி பேட்டிங்கால் மிரட்டி வருகின்றனர். இஷானும் ரிஷப்பும் முன்னாள் ஜாம்பவான்கள், இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்து வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

கொல்கத்தாவுக்கு எதிராக இஷான் கிஷான் 21 பந்துகளில் 62 ரன்கள் குவித்த இன்னிங்ஸ் மற்றும் ஹைதராபாத்துக்கு எதிராக ரிஷப் பண்ட்டின் 63 பந்துகளுக்கு 128 இன்னிங்ஸ் ஆகிய இரண்டு இன்னிங்ஸ்களும் இந்த ஐபிஎல் சீசனின் அடையாளங்கள்.
இருவரின் ஆட்டத்திறனும் சிறப்பாக உள்ளது. இஷான் கிஷான், ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே விக்கெட் கீப்பர்கள். இவர்கள் இருவருக்குமே எதிர்காலத்தில் இந்திய அணியில் கண்டிப்பாக இடம் கிடைக்கும். ஆனால் தற்போது அனுபவம் வாய்ந்த சீனியர் விக்கெட் கீப்பர் தோனி அணியில் இருப்பதால், அவரது ஓய்வுக்கு பிறகு இவர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்பது அறிந்ததே.

இந்நிலையில், இஷான் கிஷான் மற்றும் ரிஷப் பண்ட் குறித்து முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள கங்குலி, இஷான் கிஷான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் சிறந்த வீரர்கள். இவர்கள் தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம். இவர்களுக்கு இந்திய அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும். அவர்களுக்கான நேரம் வரும்; அதுவரை காத்திருக்க வேண்டும். இவர்களுக்கு வயது குறைவுதான். இன்னும் அதிக வயது ஆகிவிடவில்லை. இந்திய அணிக்காக ஆடுவதற்கு முன்பாக சீராக ஆடி நிலைத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதிக போட்டிகளில் ஆடி ஆட்டத்திறனையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தற்போது அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பரான தோனி இருக்கிறார். அவருக்கு பிறகு அந்த இடத்திற்கு தினேஷ் கார்த்திக்கும் தகுதியானவர் தான். தினேஷ் திறமை வாய்ந்த வீரர். எனவே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கங்குலி தெரிவித்தார்.
