Throughout this series will get a chance to win us vilttinale Coley - Mitchell Starc
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியை தொடர் முழுவதுமாக சாய்த்தால் மட்டுமே, இந்தத் தொடரில் எங்களது வெற்றியை உறுதி செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் மோதி வருகிறது.
இதில் புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
விறுவிறுப்பான ஆட்டத்துக்கு பெயர்போன கோலி, அதிர்ச்சி அளிக்கும் வகையில் தனது முதல் இன்னிங்ஸில் ஓட்டங்கள் ஏதும் இன்றியும் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 13 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார்.
இதில் முதல் இன்னிங்ஸில் கோலியை டக் அவுட் ஆக்கிய பெருமையை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் தேடிக் கொண்டார்.
இந்த நிலையில், அதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:
‘கோலி ஒரு மிகச் சிறந்த வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த ஆண்டில் ஏற்கெனவே அவர் மலை போல ஓட்டங்களை குவித்துள்ளார்.
இந்த நிலையில், முதல் டெஸ்ட்டில் அவரை நாங்கள் ஓட்டங்கள் ஸ்கோர் செய்ய விடவில்லை. எனவே, 2-ஆவது போட்டியில் அவர் மிகுந்த பலத்துடனும், ஆக்ரோஷத்துடனும் திரும்புவார் என்ற எச்சரிக்கையுடன் கோலியை நாங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.
ஏனெனில், இந்தத் தொடர் முழுவதுமாகவே கோலி ஒரு முக்கிய விக்கெட் ஆவார். இந்த தொடர் முழுவதுமாக அவரது விக்கெட்டை சாய்த்தால் மட்டுமே, இந்தத் தொடரில் எங்களது வெற்றியை உறுதி செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
முதல் டெஸ்ட் வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளபோதும், இந்த ஒரு வெற்றியே தொடரை கைப்பற்றுவதற்கு போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்துள்ளோம்.
இன்னும் 3 முக்கியமான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்று ஸ்டார்க் கூறினார்.
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மார்ச் 4-ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது.
