Three people have advanced to the third round of

இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச், ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் ஆகிய மூன்று பேரும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6-4, 7-6 (5) என்ற நேர் செட்களில் பிரிட்டனின் கைல் எட்மன்டை வீழ்த்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றிய ஜோகோவிச், அடுத்த செட்டில் 3-5 என்ற கணக்கில் பின்தங்கினார். இதனால் 2-ஆவது செட் எட்மன்ட் வசமாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பின்னர் அபாரமாக ஆடிய ஜோகோவிச், அந்த செட்டை டைபிரேக்கருக்கு கொண்டு சென்றார். அதில் அபாரமாக ஆடிய அவர் 7-6 (5) என்ற கணக்கில் 2-ஆவது செட்டை கைப்பற்றி வெற்றி அடைந்தார்.

ஜோகோவிச் தனது 3-ஆவது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டினை சந்திக்கிறார்.

ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது 2-ஆவது சுற்றில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஸ்டீபன் ராபர்ட்டை தோற்கடித்தார்.

அடுத்த சுற்றில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை சந்திக்கிறார் ஃபெடரர்.

ஸ்பெயினின் நடால் தனது 2-ஆவது சுற்றில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் குய்டோ பெல்லாவை வீழ்த்தினார்.

அடுத்த சுற்றில் சகநாட்டவரான பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை சந்திக்கிறார் நடால்.