This year he will achieve with his qualification - world champion Johannes ...

இந்திய இளம் தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இருக்கும் தகுதிக்கு இந்த ஆண்டே 90 மீ தூரம் ஈட்டி எறிந்து சாதிப்பார் என்று தற்போதைய உலக சாம்பியன் ஜோஹன்னஸ் வெட்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதலில் 86.47 மீ தூரம் எறிந்து நீரஜ் சோப்ரா (20) தங்கம் வென்றார். இதனால் அனைவரின் கவனமும் அவர் மீது திரும்பியுள்ளது. அவர் ஏற்கெனவே உலக ஜூனியர் தடகளத்திலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய உலக சாம்பியன் ஜோஹன்னஸ் வெட்டர் 94.44 மீ தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளார். டோஹாவில் நடைபெறவுள்ள டையமண்ட் லீக் போட்டியில் அவருடன், நீரஜ் சோப்ராவும் போட்டியில் உள்ளார். 

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வெட்டர், "இந்த சீசனில் சோப்ரா 90 மீ தூரம் ஈட்டி எறியும் வாய்ப்பு உள்ளது. 

வளர்ந்து வரும் வீரராக அவர் திகழ்கிறார். இந்த ஆண்டே அவர் இச்சாதனையை புரிய வாய்ப்புள்ளது. 

அவருக்கு சிறந்த உடல் தகுதி, திறமை உள்ளது. ஏற்கெனவே உலக ஜூனியர் சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார்" என்று தெரிவித்தார். 

டையமண்ட் லீக் தடகளப் போட்டியில் வெட்டர், ஒலிம்பிக் சாம்பியன் தாமஸ் ரோலர், ரியோ ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜூலியஸ் ஏகோ ஆகியோரும் பங்கேற்கின்றனர். 

இதுவரை 18 வீரர்களே ஈட்டி எறிதலில் 90 மீட்டரை தாண்டி எறிந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.