“எனக்கு மிகவும் நெருங்கிய நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது வெற்றியின் இரகசியம். ஏனெனில், இதன் மூலம் தேவையற்ற தொந்தரவுகள் இருக்காது. நேரத்தையும் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த கோலி, ஒருநாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் அணிகளின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்ட பின் அவரது தலைமையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை புனேயில் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 351 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி எட்டிப் பிடித்தனர்.

இதில் கேப்டன் விராட் கோலி 105 பந்துகளில் 122 ஓட்டங்கள் எடுத்தார். கேதார் ஜாதவ் 76 பந்துகளில் 120 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த சதத்தின் மூலம் இரண்டாவது பேட்டிங்கில் (சேசிங்) அதிக சதமடித்த (17) சச்சினின் சாதனையை கோலி சமன் செய்தார். தற்போதைய நிலையில் 100 சதமடித்த சச்சினின் சாதனையையும் எட்ட வாய்ப்புள்ள ஒரே வீரர் விராட் கோலி மட்டும்தான்.

இந்நிலையில், திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

“நான் இதுவரை பங்கேற்ற போட்டிகளில் மிகவும் சிறப்பாக திட்டமிட்டு இலக்கை எட்டிய போட்டி இங்கிலாந்துக்கு எதிரானதுதான். இதில் கேதார் ஜாதவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அவரது சில ஷாட்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின.

இந்திய அணியில் சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக விளையாடும் மற்றொரு இளைஞரை அடையாளம் கண்டு கொண்டுவிட்டோம்.

63 ஓட்டங்களில் 4 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தபோது களத்தில் இருந்த ஜாதவும், நானும் நம்பிக்கை இழக்கவில்லை. அடுத்து எப்படி வேகமாக ரன் குவித்து அணியை சரிவில் இருந்து மீட்பது என்பதை மட்டுமே யோசித்தோம். எங்கள் பார்ட்னர்ஷிப் இந்தப் போட்டியில் சிறப்பாக அமைந்தது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் ஜாதவ் சிறப்பாக விளையாடினார்.

சச்சின் டெண்டுல்கரைப் போல 24 ஆண்டுகள் இந்திய அணியில் இடம் பெற்று, 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் என்னால் விளையாட முடியாது. அவரது இந்தச் சாதனைகளை யாரும் எளிதில் எட்டிவிட முடியாது.

எனக்கு மிகவும் நெருங்கிய நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது வெற்றியின் இரகசியம் என்று கருதுகிறேன். ஏனெனில், இதன் மூலம் தேவையற்ற தொந்தரவுகள் இருக்காது. நேரத்தையும் சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது, அதிக ரன் எடுக்க வேண்டுமென்று எனக்கு நானே நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டேன். அந்தத் தொடரில் என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதன் பிறகு, மன ரீதியாகவும், பேட்டிங் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டேன். இப்போது எனக்கு பந்து வீசுவதற்கு பல்வேறு நிலைகளில் எதிரணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

அடுத்த பந்து எப்படி வரும் என்பதை பந்து வீச்சாளரின் உடல்மொழியில் இருந்து ஓரளவுக்கு தெரிந்து கொள்ள முடியும். அதிவேகப்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற நுட்பத்தை சச்சின் எனக்கு ஏற்கெனவே கற்றுக் கொடுத்துள்ளார்” என்று விராட் கோலி கூறினார்.