மகளிர் கிரிக்கெட் போட்டியின் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்க்க போகும் இந்திய அணி மிதாலி ராஜ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடச் சென்ற இந்திய அணி, மிதாலி ராஜ் தலைமையில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஹர்மன்பிரீத் கெளர் தலைமையில் டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும் வென்றது.

அதனைத் தொடர்ந்து இந்தியா வரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணியுடன் மோதுகிறது.

இதில் ஒருநாள் தொடரின் 3 ஆட்டங்களும் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டங்கள் முறையே மார்ச் 12, 15, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு மிதாலி ராஜை கேப்டனாகவும், ஹர்மன்பிரீத் கெளரை துணை கேப்டனாகவும் அகில இந்திய மகளிர் தேர்வுக் குழு நியமித்துள்ளது.

இந்த ஒருநாள் தொடர், ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாகும் என பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளதரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி விவரம்

மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கெளர், ஸ்மிருதி மந்தனா, பூனம் ராவத், ஜெமிமா ரோட்ரிகஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ராம், சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்),

எக்தா பிஷ்த், பூனம் யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஷிக்ஷா பாண்டே, சுகன்யா பரிதா, பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா.