7 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பல்லாண்டுகால கனவை தோனி தலைமையிலான இந்திய அணி நனவாக்கியது.

1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றது. அதன்பிறகு 1987, 1992, 1996, 1999 ஆகிய உலக கோப்பைகளில் இந்திய அணி சரியாக சோபிக்கவில்லை.

1983க்கு பிறகு இந்தியாவின் உலக கோப்பை கனவு கனவாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் கங்குலி தலைமையிலான இந்திய அணி, 2003 உலக கோப்பையின் இறுதி போட்டி வரை சென்றது. ஆனாலும் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிடம் இறுதி போட்டியில் தோற்று ஏமாற்றம் அளித்தது.

2007 உலக கோப்பையில் லீக் சுற்றிலேயே வெளிவந்து அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து ராகுல் டிராவிட், கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு தோனி கேப்டனானார். 

2011 உலக கோப்பையே இந்திய அணியின் இலக்காக இருந்தது. அதற்காக 2008லிருந்தே இந்திய அணியை தோனி தயார் செய்தார். சச்சினுக்கு 2011 உலக கோப்பையே கடைசி. இந்திய அணிக்கு நீண்டகால பங்களிப்பை அளித்த சச்சினுக்கு உலக கோப்பையை பரிசாக கொடுத்த அனுப்ப வேண்டும் என்பதே தோனி, யுவராஜ் ஆகியோரின் எண்ணமாக இருந்தது.

2011 உலக கோப்பையில், சிறப்பாக விளையாடிய இந்திய அணி, காலிறுதியில் ஆஸ்திரேலியா, அரையிறுதியில் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.

இறுதி போட்டியில் இலங்கை அணியை மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஜெயவர்தனேவின் அபார சதத்தால் 274 ரன்கள் குவித்தது.

275 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. சேவாக்கும் சச்சினும் அடுத்தடுத்து வெளியேறினர். வான்கடே மைதானமே அமைதியில் ஆழ்ந்தது. காம்பீர் மற்றும் கோலியின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி மீண்டெழுந்தது. கோலி அவுட்டானதும், அடுத்த வரிசையில் யுவராஜ் சிங் இறங்க வேண்டும். ஆனால், யுவராஜை நிறுத்திவிட்டு அந்த இடத்தில் தோனி களமிறங்கி ரிஸ்க் எடுத்தார்.

அந்த தொடர் முழுதும் சிறப்பாக ஆடிய யுவராஜை நிறுத்திவிட்டு இறுதி போட்டியில் பேட்டிங் வரிசை மாறி, தானே முன்வந்து அந்த இடத்தில் இறங்கி தோனி ரிஸ்க் எடுத்தார். ஆனால் தோனி நிதானமாகவும் அதேநேரத்தில் ரன் ரேட் குறையாமலும் ஆடினார். இறுதி போட்டியில் சதமடிக்கும் அற்புதமான வாய்ப்பை தவறவிட்டு காம்பீர், 97 ரன்களில் அவுட்டானார். 

தோனியும் யுவராஜூம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இறுதியில் சிக்ஸர் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்தார் தோனி. தோனியின் அந்த ஷாட், இன்றளவு மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் பார்க்கப்பட போகிற ஒன்று. கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்து நிறகக்கூடிய ஷாட் அது. ஏனென்றால் வின்னிங் ஷாட்.

28 ஆண்டுகால கனவு நனவானது. இந்தியா உலக கோப்பையை வென்றது. அந்த இரவு இந்தியாவிற்கானதாக அமைந்தது. நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். 2011 உலக கோப்பையை இந்தியா வென்ற தினம் இன்று.