அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், இந்தியாவின் சானியா மிர்சா - சீனாவின் பெங் ஷுவாய் இணை ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயருடன் மோதினார்.

இதில் நடால் 6-7(7), 6-3, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

நடால் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உக்ரைனின் அலெக்ஸாண்டர் டோல்கோபோலோவை எதிர்கொள்கிறார்.

மற்றொரு 3-வது சுற்றில் உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஸ்பெயினின் ஃபெலிசியானோ லோபஸுடன் மோதினார்.

இதில் 6-3, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஃபெலிசியானோ லோபஸை வீழ்த்தினார் ஃபெடரர்.

ஃபெடரர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனியின் ஃபிலிப் கோல்ஷ்ரைபரை சந்திக்கவுள்ளார்.

இதர 3-வது சுற்றுகளில் பெல்ஜியத்தின் டேவிட் காஃபின் 7-5, 5-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை வீழ்த்தினார்.

ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவ் 6-4, 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் போஸ்னியா வீரர் டாமிர் ஸம்ஹூரை வீழ்த்தினர்.

உலகின் 6-ஆம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 7-5, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோவை வீழ்த்தினார்.

அமெரிக்க ஓபனின் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தனது 3-வது சுற்றில் 3-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் ஸாங் ஷுவாயை வீழ்த்தினார்.

இதனையடுத்து தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை சந்திக்கிறார் கரோலினா.

இதர 3-வது சுற்றுகளில் உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சை வீழ்த்தினார்.

அமெரிக்காவின் கோகோ வான்டேவேகி, 5-7, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா வீழ்த்தினார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - சீனாவின் பெங் ஷுவாய் இணை தனது 3-வது சுற்றில் 6-7(7), 6-3,6-3 என்ற செட் கணக்கில் செர்பியாவின் மெக்தலினா ரைபரிகோவா - ஜானா செபலோவா இணையை வீழ்த்தியது.

அதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - கனடாவின் கேப்ரியேலா டப்ரெஸ்கி இணை 6-4, 4-6, 13-11 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஹீதர் வாட்சன் - ஃபின்லாந்தின் ஹென்றி கான்டினென் இணை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.