These are the players who are participating in the national level chess tournament.

தேசிய அளவிலான சதுரங்க பட்டயப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க எட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சதுரங்க விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு சர்வதேச தரப் புள்ளிகள் வழங்குவதற்கான போட்டிகள் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கின. 

ஐந்து நாள்கள் நடைபெற்ற இப்போட்டிகளில், தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களைச் சேர்ந்த 164 ஆண்கள் மற்றும் 84 பெண்கள் என மொத்தம் 248 பேர் பங்கேற்றனர். 

ஒன்பது சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டிகளின் முடிவில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான சதுரங்க பட்டயப் போட்டிக்கு நேற்று தேர்வு செய்யப்பட்டனர். 

அதன்படி, ஆண்கள் பிரிவில் பிடே மாஸ்டர் வி.எஸ்.ரத்தினவேல் (கோவை) 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். தலா 7 புள்ளிகளுடன் எம்.பரத் கல்யாண் (திருவாரூர்), ஆர்.மனு டேவிட் சுதந்திரம் (சென்னை), கே.கோகுல்ராஜ் (திருவள்ளூர்) ஆகியோர் 2, 3 மற்றும் 4 ஆவது இடங்களைப் பெற்றனர். 

இதேபோல, பெண்கள் பிரிவில் எல்.ஜோஸ்த்னா (நெய்வேலி) 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். எம்.திவ்யபாரதி மாசானம் (சென்னை), ஐ.ஹரிவர்தனி (திருவள்ளூர்), கே.எம்.ஸ்ரீஷா (கடலூர்) ஆகியோர் முறையே 2, 3 மற்றும் 4-ஆவது இடங்களைப் பெற்றனர்.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதல் 10 இடங்களைப் பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. 

இந்த பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, பிஎஸ்என்ஏ கல்லூரி முதல்வர் என்.மகேந்திரன் தலைமை வகித்தார். டிஎஸ்பி.பாலகுமார் முன்னிலை வகித்தார். பரிசுப் பொருள்களை மாவட்ட சதுரங்க கழக தலைவர் கோ.சுந்தரராஜன் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.