These are the advanced players of the semi-finals of the Indian Open Boxing Federation.

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியர்களான சுமித் சங்வான், சர்ஜுபாலா தேவி, ஷியாம் குமார், பிங்கி சங்ரா, பூஜா நமன் தன்வார், மணீஷ் கௌஷிக், சிவ தாபா ஆகியோர் முறையே தங்களது பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர்.

இந்தியாவில் முதல் முறையாக இந்திய ஓபன் என்ற பெயரில் ஆடவர் மற்றும் மகளிருக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டி டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவருக்கான 91 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில், போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சுமித் சங்வான் 5-0 என்ற கணக்கில் சகநாட்டவரான வீரேந்தர் குமாரை காலிறுதியில் வீழ்த்தினார்.

அதே பிரிவில் நமன் தன்வார் தனது காலிறுதியில் ஜோர்டானின் இஷைஷ் ஹுசைனை வீழ்த்தினார்.

போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிவ தாபா ஆடவருக்கான 60 கிலோ பிரிவில் பூடானின் டோர்ஜி வாங்டியை வென்றார்.

மற்றொரு ஆட்டத்தில் ஆடவருக்கான 60 கிலோ பிரிவில் நடப்பு தேசிய சாம்பியனான மணீஷ் கௌஷிக், கியூபாவின் ராபி அர்மான்டோ மார்டினொஸை வென்றார்.

அதேபோன்று 49 கிலோ பிரிவில் ஷியாம் குமார் 5-0 என சகநாட்டவரான நீரஜ் ஸ்வாமியை வீழ்த்தினார்.

மகளிருக்கான 51 கிலோ பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சர்ஜுபாலா தேவி 5-0 என்ற கணக்கில் கென்யாவின் கிறிஸ்டைன் ஆங்கெரை வீழ்த்தினார்.

மற்றொரு காலிறுதியில் பிங்கி சங்ரா 5-0 என்ற கணக்கில் ஜோர்டானின் அல் ரிஹீலை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

மற்றொரு பிரிவான 69 கிலோ எடைப் பிரிவில் பூஜா அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.