இந்திய பளு தூக்குதல் வீராங்கனைகளான இந்தியாவின் சாய்கோம் மிராபாய் சானு, சஞ்சிதா சானு ஆகியோர் அடுத்தாண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சீனியர் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் சாய்கோம் மிராபாய் சானு, ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 104 கிலோ என மொத்தமாக 189 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தார்.

இதன்மூலம், காமன்வெல்த் போட்டியின் ஸ்னாட்ச் பிரிவில் தான் படைத்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

இதேபோல், மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் சஞ்சிதா சானு, ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 110 கிலோ என மொத்தமாக 195 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.

இதே பிரிவில் மற்றொரு இந்தியரான சந்தோஷி 194 கிலோ (86+108) எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தார்.

இதனிடையே, ஆடவருக்கான 56 கிலோ எடைப் பிரிவில் இந்தியரான குருராஜா 246 கிலோ (107+139) எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஜூனியர் மகளிர் பிரிவில் அனன்யா பாட்டீல் 53 கிலோ எடைப் பிரிவிலும், ஜில்லி தாலபெஹெரா 48 கிலோ எடைப் பிரிவிலும் தங்கம் வென்றனர்.

ஜூனியர் ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் ஜெரெமி லால்ரினுங்கா 240 கிலோ (109+131) கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார்.

இந்த காமன்வெல்த் சீனியர் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்களது பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் சாய்கோம் மிராபாய் சானு, சஞ்சிதா சானு ஆகியோர் அடுத்தாண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பது உறுடியானது.