திருச்சியில் நடைபெற்ற 83-வது அகில இந்திய இரயில்வே தடகளப் போட்டியில் மேற்கு இரயில்வே அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

83-வது அகில இந்திய ரயில்வே தடகளப் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது.

இதை திருச்சி இரயில்வே கோட்ட மேலாளர் பி.உதயகுமார் ரெட்டி தொடங்கி வைத்தார்.
இதில் பல்வேறு வகையான தனிநபர் போட்டிகள், குழு போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெற்றன.

இதில், ஆடவர் தனிநபர் பிரிவில் வட மேற்கு இரயில்வே வீரர் சித்தார்த் யாதவ் 1081 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

மகளிர் தனிநபர் பிரிவில் வட மேற்கு ரயில்வேயின் கோமல் செளத்ரி 1063 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடித்த மேற்கு இரயில்வே அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.

பின்னர் நடைப்பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், இரயில்வே விளையாட்டுக் குழுமத் தலைவர் ஜே.பி.பாண்டே சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.

திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் பி.உதயகுமார் ரெட்டி, கூடுதல் கோட்ட மேலாளர் எச்.மோகன்சர்மா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வில்சன் செரியன், உதவி ஒருங்கிணைப்பாளர்கள் தாரம்மாள், அண்ணாவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.