வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சதம் அடித்ததன் மூலம், அந்த அணிக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக் கிடைத்தது.

வங்கதேச கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அங்கு நடைபெற்ற தலா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள், டி-20 தொடர்களை வங்கதேச அணி 3-0 என்ற கணக்கில் இழந்தது.

இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வெலிங்டனில் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது.

இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி, 152 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 595 ஓட்டங்கள் குவித்து, டிக்ளேர் செய்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ரன் இதுவே ஆகும். இதற்கு முன்னர், 120 ஆண்டுகளுக்கு முன் அதாவது, 1894-இல் சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து எதிராக 586 ஓட்டங்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

வங்கதேசத்தின் தற்போதைய புதிய சாதனைக்கு அந்த அணியின் ஷகிப் அலஹசனின் (217 ஓட்டங்கள்) இரட்டைச் சதமும், கேப்டன் முஷ்பிகுர் ரஹீமின் (159 ஓட்டங்கள்) பங்களிப்புமே காரணம்.

இதைத்தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் டாம் லாதம், 177 ஓட்டங்கள் விளாசி, ரன் குவிப்புக்கு வழிவகுத்தார். மற்ற வீரர்கள் குறிப்பிட்ட அளவுக்கு ரன் சேர்த்து உதவினர். நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 148.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 539 ஓட்டங்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி பந்துவீச்சு, ஃபீல்டிங்கில் சுதாரித்துக் கொண்டதால் எதிரணி 57.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 160 ஓட்டங்களில் சுருண்டது.

இதைத் தொடர்ந்து, 217 ஓட்டங்களை இலக்காகக் கொண்டி நியூஸிலாந்து பேட்டிங் செய்தது. கடைசி நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய அந்த அணியில் கேப்டன் கேன் வில்லியம்சனும் (104 ஓட்டங்கள், 90 பந்து, 15 பவுண்டரி) ராஸ் டெய்லரும் (60 ஓட்டங்கள், 77 பந்து) சிறப்பாக ஆடி, நியூஸிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டனர்.

39.4 ஓவர்களில் அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் வங்கதேச கேப்டன் முஷ்பிகுர், இம்ருள் கயெஸ் ஆகியோர் காயம் காரணமாக பாதியில் வெளியேறினர்.

முதல் இன்னிங்ஸில் ரன் குவிப்பில் சாதனை படைத்தும், வெற்றியைக் கோட்டை விட்டது, வங்கதேச வீரர்களை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

இவ்விரு அணிகளிடையிலான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.