Asianet News TamilAsianet News Tamil

ஐ.ஓ.ஏ முடிவை திரும்பப் பெறும் வரையில் சஸ்பெண்ட் தொடரும்

the suspension-will-continue-until-the-withdrawal-decis
Author
First Published Dec 31, 2016, 12:44 PM IST


கல்மாடி, செளதாலா ஆகியோரை வாழ்நாள் தலைவர்களாக தேர்வு செய்த முடிவை திரும்பப் பெறும் வரையில் ஐ.ஓ.ஏ சஸ்பெண்ட் தொடரும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சுரேஷ் கல்மாடி, அபய் சிங் செளதாலா ஆகியோர் ஐ.ஓ.ஏ.வின் வாழ்நாள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஐ.ஓ.ஏ உரிய விளக்கம் அளிக்காததைத் தொடர்ந்து ஐ.ஓ.ஏவை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது விளையாட்டு அமைச்சகம்.

கல்மாடி, செளதாலா ஆகியோரை வாழ்நாள் தலைவர்களாக தேர்வு செய்த முடிவை திரும்பப் பெறும் வரையில் இந்த சஸ்பெண்ட் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற ஐஓஏ ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின்போது சுரேஷ் கல்மாடி, அபய் சிங் சௌதாலா ஆகியோர் வாழ்நாள் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. இதனால் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியடைந்த மத்திய விளையாட்டு அமைச்சகம், கல்மாடி, செளதாலா ஆகியோர் வாழ்நாள் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டது ஐஓஏ விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே இது தொடர்பாக ஐஓஏ வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஆனால் ஐஓஏ தலைவர் ராமச்சந்திரன் வெளிநாட்டில் இருப்பதால் இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு 15 நாள் கால அவகாசம் தருமாறு ஐஓஏ தரப்பில் கேட்கப்பட்டது.

இதையடுத்து ஐஓஏ விளக்கமளிக்க தவறியதாகக் கூறி அதன் அங்கீகாரத்தை தாற்காலிகமாக இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது மத்திய விளையாட்டு அமைச்சகம்.

இது தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கூறியதாவது:

“தவறான விஷயங்களை அரசு அனுமதிக்காது. ஐஓஏவுக்கு அனுப்பப்பட்ட விளக்க நோட்டீஸ் மிகத் தீவிரமான ஒன்றாகும். ஆனால் அவர்கள் அதற்கு பதிலளிக்காமல் 15 நாள் கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள்.

இதையடுத்து கல்மாடி, செளதாலா ஆகியோரை வாழ்நாள் தலைவர்களாக தேர்வு செய்ததை திரும்பப் பெறும் வரையில் ஐஓஏவை சஸ்பெண்ட் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

சஸ்பெண்ட் உத்தரவு நீக்கப்படும் வரையில் அரசிடமிருந்து நிதியுதவி உள்ளிட்ட எந்த சலுகைகளையும் ஐஓஏ பெற முடியாது” என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios