The second day of the match to clinch the two teams winning

சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்துப் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டத்தில் ஐசிஎஃப் மற்றும் சென்னை சிட்டி அணிகள் வெற்றி பெற்றன.

செயிண்ட் ஜோசப் - சென்னை கால்பந்து சங்கம் இணைந்து நடத்தும் இந்தப் போட்டி திங்கள்கிழமை தொடங்கி, சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 2-ஆம் நாளான நேற்று சீனியர் டிவிஷன் பிரிவின் முதல் ஆட்டத்தில் சென்னை சிட்டி எஃப்சி - கணக்கு தணிக்கை அலுவலக மனமகிழ் மன்ற கிளப் (ஏஜி) அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணி வீரர் மாய்ஸாஃபெலா 22-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து கணக்கை தொடங்கினார்.

அடுத்ததாக, அந்த அணியின் சூசை 36-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, கோல் வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வந்தது ஏஜி அணி.

இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் சென்னை அணி 2-0 என முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை வீரர் பியுட்டின் ஒரு கோல் அடிக்க, அந்த அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

2-ஆவதாக நடைபெற்ற ஐசிஎஃப் - சென்னை எஃப்சி அணிகள் இடையேயான ஆட்டத்தில் ஐசிஎஃப் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் இன்றி சம நிலையில் இருந்தன. 2-ஆவது பாதி ஆட்டம் நிறைவடைய இருந்த நிலையில், ஐசிஎஃப் அணியின் ஃப்ரெட்டி 93-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

எஞ்சிய நேரத்தில் சென்னை எஃப்சி அணிக்கு கோல் வாய்ப்பு கிடைக்காததால், ஐசிஎஃப் அணி வெற்றி பெற்றது.