இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி அரை சதம் விளாசினார். ஸ்மிருதி மந்தனா சூப்பராக பேட்டிங் செய்தார்.

இலங்கை மகளிர் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்திய மகளிர் அணி, இலங்கை மகளிர் அணி இடையிலான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டணத்தில் இன்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே 43 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.

இலங்கை அணி ஆல் அவுட்

இந்திய அணி தரப்பில் கிராந்தி கௌட், தீப்தி ஷர்மா மற்றும் ஸ்ரீ சரணி தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். இலங்கை அணியின் மூன்று வீராங்கனைகள் ரன் அவுட் ஆகினர். பின்பு இந்திய அணி எளிய இலக்கை நோக்கி ஆடிய நிலையில் ஷஃபாலி வர்மா 9 ரன்னில் கேட்ச் ஆனார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் இருவரும் அதிரடியில் வெளுத்துக் கட்டினார்கள்.

ஸ்மிருமிதி மந்தனா-ஜெமிமா ரோட்ரிக்ஸ் சூப்பர் பேட்டிங்

இசையமைப்பாளருடன் நடக்கவிருந்த திருமணம் ரத்தான பிறகு முதல் போட்டியில் விளையாடிய ஸ்மிருதி மந்தனா இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் அவரது நெருங்கிய தோழியான ஜெமிமா பவுண்டரியாக விளாசித்தள்ளினார். இருவரும் ஜோடியாக 50 ரன்களுக்கு மேல் சேர்த்த நிலையில், நன்றாக விலையாடிய ஸ்மிருதி மந்தனா 25 பந்தில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். ஆனால் மறுபக்கம் நாலாபுறமும் பந்துகளை விரட்டியடித்த ஜெமிமா சூப்பர் சரை சதம் விளாசினார்.

இந்திய அணி அபார வெற்றி

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் இந்திய அணி 14.4 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியில் பட்டையை கிளப்பிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.