The second day of the match is rainfall India have made 74 runs for the loss of 5 wickets.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதன் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச தீர்மானித்தது.
முதல் நாள் ஆட்டம் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட்டது. எஞ்சிய நேரத்தில் பேட் செய்த இந்தியாவில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், கேப்டன் விராட் கோலி ஆகியோர் டக் ஔட் ஆக, ஷிகர் தவன் 8 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
இப்படி, முதல் நாள் முடிவில் 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ஓட்டங்கள் எடுத்திருந்தது இந்தியா.
இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தை சேதேஷ்வர் புஜாரா 8 ஓட்டங்களுடனும், ரஹானே ஓட்டங்கள் இன்றியும் தொடங்கினர்.
இதில் ரஹானே ஒரேயொரு பவுண்டரியுடன் 4 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் 17-வது ஓவரில் டாசன் சனகா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் புஜாரா மிக நிதானமாக தடுப்பாட்டம் ஆடி வர, ரஹானேவைத் தொடர்ந்து ஆல் ரவுண்டர் அஸ்வின் களம் கண்டார்.
இந்த நிலையில், லாஹிரு காமேஜ் வீசிய 24-வது ஓவரில் ஒரு பந்து புஜாராவின் கை விரல்களில் பட்டது. இதில் காயமடைந்த புஜாரா, சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்டத்தை தொடங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், 25-வது ஓவரின் கடைசி பந்தில் அஸ்வின் ஆட்டமிழந்தார். 29 பந்துகளுக்கு ஒரேயொரு பவுண்டரி விளாசியிருந்த அவர், சனகா வீசிய பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ரித்திமான் சாஹா களம் கண்டு சிறிது நேரம் விளையாடிய நிலையில் மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விடாமல் மழை பெய்ததை அடுத்து 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது இந்தியா 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்கள் எடுத்திருந்தது. புஜாரா 9 பவுண்டரிகள் உள்பட 47 ஓட்டங்கள், ரித்திமான் சாஹா ஒரு பவுண்டரியுடன் 6 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நிற்கின்றனர்.
