இரசிகர்கள்மீது காவல்துறை தடியடித் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. அதுபோன்ற ஒரு சம்பவமே இங்கு நடைபெறவில்லை. தமிழ்நாடு காவல்துறையினர், டிக்கெட் வாங்க வந்த இரசிகர்களை ஒழுங்குசெய்து முறைப்படுத்தினார்கள் என்று டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் நாளன்று 11,422 பேரும் இரண்டாம் நாளன்று 16,245 பேரும் சேப்பாக்கம் மைதானத்துக்கு வருகை புரிந்துள்ளார்கள் என்று தகவல் அளிக்கிறது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.

ஆனால் டிக்கெட் கிடைக்காமல் ஏமாந்துபோனவர்களின் எண்ணிக்கை இதைவிடவும் அதிகம் இருக்கலாம் என்கிறார்கள் இரசிகர்கள். அந்த அளவுக்கு மேட்ச் பார்க்க ஆசைப்பட்டு டிக்கெட் கிடைக்காமல் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இந்தக் குற்றச்சாட்டு பரவலாக வர ஆரம்பித்ததால் இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ட்விட்டர் தளத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அந்த விளக்கம்:

“டிக்கெட்டுகளுக்கான தேவை, இரசிகர்கள்மீது நடந்ததாகக் கூறப்படும் தடியடித் தாக்குதல், காலியாக உள்ள மாடங்கள் போன்றவை குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலர் கே.எஸ். விஸ்வநாதன் விளக்கமளிக்க விருப்பப்படுகிறார். 

சில மாடங்களில் உள்ள காலியான இருக்கைகள்: சீசன் டிக்கெட்டுகள் - கவுண்டர்கள் மற்றும் இணையம் வழியாக முன்பே விற்கப்பட்டுவிட்டன. ஞாயிற்றுக்கிழமை அன்று ஒருநாள் டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு ஆரம்பித்து 8.30 மணிக்குள் முடிந்துவிட்டது. 

இரசிகர்கள்மீது காவல்துறை தடியடித் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. அதுபோன்ற ஒரு சம்பவமே இங்கு நடைபெறவில்லை.

டிக்கெட் வாங்க வந்த இரசிகர்களை ஒழுங்குசெய்து முறைப்படுத்தினார்கள் தமிழ்நாடு காவல்துறையினர் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.