The petition filed for retired judges requested to select cricket players in the state and district level
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வி.டி.பட்டியைச் சேர்ந்த மாணவர் டி.தினேஷ் சார்பில் அவரது தந்தை என்.தனிக்கொடி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், “தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 14, 16, 19 மற்றும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான மாநில அணிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
அந்தந்த வயதிற்கு உட்பட்டோருக்கான பல்வேறு கட்ட போட்டிகளை மாவட்ட, மாநில அளவில் நடத்தி, அதில் இருந்து தகுதியான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்போட்டியில் பங்கெடுக்கும் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனின் அடிப்படையில் தேர்வு நடைபெற வேண்டும் என்பது விதி. ஆனால், மாவட்டத் தேர்வுக் குழுவில் உள்ளவர்கள் தகுதியான மாணவர்களை விட தங்களுக்கு வேண்டியவர்களையே தேர்வு செய்கின்றனர்.
மாநில அளவில் தேர்வாகும் வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற முடியும். இதனால் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு முழுத் திறமையுடன் வாய்ப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 2016 – 2017-ஆம் ஆண்டுக்கான 16 வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில அணித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்,
இனிவரும் காலங்களில் மாவட்ட, மாநில தேர்வுக்குழு நிர்வாகிகளுக்கு பதிலாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கிரிக்கெட் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து அவர்கள் வழங்கும் விதிமுறைகள்படி வீரர்களைத் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர், தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
