பந்தின் தன்மையை ஆஸ்திரேலிய வீரர்கள் மாற்ற முயன்ற விவகாரம் சமநோக்குப் பார்வையுடன் அணுகப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் வலியுறுத்தினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. 

கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்த முயன்றது விடியோவில் பதிவாகியது. 

இது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் உதவியுடன் செய்யப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஸ்மித்தும், பேன்கிராஃப்டும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அத்துடன், அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னரும் விலகிக் கொள்வதாக அறிவித்தனர். 

இந்த நிலையில் இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் முகநூலில் நேற்று வெளியிட்ட பதிவு:

"பந்தின் தன்மையை ஆஸ்திரேலிய வீரர்கள் மாற்ற முயன்ற விவகாரம் சமநோக்குப் பார்வையுடன் அணுகப்பட வேண்டும். 

நல்ல கிரிக்கெட் விளையாட்டுக்கான அடித்தளத்தைக் கட்டமைக்க மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நான் ஆதரவு அளிப்பேன். கேப் டவுனில் நடைபெற்ற அந்த சம்பவத்தால் நானும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். 

பந்தின் தன்மையை மாற்ற நடைபெற்ற முயற்சி சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று அந்தப் பதிவில் ஸ்டீவ் வாக் குறிப்பிட்டுள்ளார்.