India faced failure in one match it does not mean it lost the battle

இந்திய அணி ஒரு போட்டியில் தோற்றதால் தொடரை இழந்துவிட்டதாக அர்த்தமாகாது. இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன என்று சச்சின் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வி கண்ட இந்திய அணி, அதிலிருந்து மீண்டு வரும் என முன்னாள் இந்திய கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

புணே டெஸ்டில் இந்திய அணி 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.

இந்த நிலையில் தில்லி ஜவாஹர்லால் மைதானத்தில் நேற்று மாரத்தான் போட்டியை சச்சின் தொடங்கி வைத்தார்.

அங்கு அவர் கூறியது:

“ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் நமக்கு எப்போதுமே கடினமானதுதான். இது விளையாட்டின் ஒரு பகுதியாகும்.

இந்திய அணி ஒரு போட்டியில் தோற்றதால் தொடரை இழந்துவிட்டதாக அர்த்தமாகாது. இன்னும் 3 போட்டிகள் உள்ளன. எனவே வெற்றி வாய்ப்பை இழந்துவிடவில்லை.

இந்திய அணியின் உத்வேகத்தைப் பற்றி எனக்குத் தெரியும். நிச்சயம் இந்திய அணி இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வரும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

ஒவ்வொரு அணிக்கும், ஒவ்வொரு வீரருக்கும் இனிமையான தருணமும், கடினமான தருணமும் வரும். அப்போது நீங்கள் சரிவிலிருந்து மீண்டு மறுபடியும் சவால் அளிக்க வேண்டும். அதுதான் விளையாட்டின் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது. அதற்காகத்தான் வீரர்கள் விளையாடுகிறார்கள்” என்று அவர் கூறினார்.