The front line came to me to stop me - Rishabh Band
முன்வரிசையில் களமிறங்கியதால் நான் என்னை நிலை நிறுத்திக் கொள்ளவும், பெரிய அளவிலான ஷாட்களை ஆடவும் கால அவகாசம் கிடைத்தது என டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் கூறினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42-ஆவது லீக் ஆட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது டெல்லி.
ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரிஷப் பந்த் கூறியது:
“நான் சந்திக்கும் முதல் பந்தே அடிக்கக்கூடியதாக இருக்குமானால், அதில் நிச்சயம் சிக்ஸரை அடிக்க முயற்சிப்பேன்.
பந்துவீச்சாளர்கள் மோசமான பந்தை வீசும்போது அதை தண்டித்துவிட வேண்டும். எதைப் பற்றியும் பெரிய அளவில் சிந்திக்காமல் எனது இயல்பான ஆட்டத்தை ஆடுமாறு ராகுல் திராவிட் என்னிடம் கூறியிருக்கிறார்.
மூன்று ஓட்டங்களில் சதத்தை நழுவவிட்டது பற்றி நினைக்கவில்லை. விரைவாக இலக்கை எட்ட வேண்டும் என்பதை பற்றி மட்டுமே சிந்தித்தேன். இலக்கை எட்டும் வரை ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், நான் சதமடித்திருக்கலாம். மாறாக சதமடித்திருந்தால் நானே ஆட்டத்தை முடித்து வைத்திருப்பேன்.
முன்வரிசையில் களமிறங்கியதால் சுதந்திரமாக விளையாட முடிந்தது. இதற்கு முன்னர் பின்வரிசையில் களமிறங்கினேன். அப்போது 15-ஆவது ஓவரில்தான் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இப்போது முன்வரிசையில் களமிறங்கியதால் நான் என்னை நிலை நிறுத்திக் கொள்ளவும், பெரிய அளவிலான ஷாட்களை ஆடவும் கால அவகாசம் கிடைத்தது. இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏற்றதாகும். இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் நான் ரசித்து விளையாடினேன்' என்றார்.
