குஜராத்திற்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது லீக் ஆட்டத்தில் 77 ஓட்டங்கள் விளாசிய கெயில், டி20 கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ஓட்டங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

குஜராத் – பெங்களூர் அணிகளுக்கு இடையே குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று இரவு நடைபெற்றது.

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. பெங்களூர் அணியில் கெயில், கோலி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் கோலி நிதானமாக ஆடினார். ஆனால், கெயில் அதிரடி காட்டத் தொடங்கினார். அவர் 23 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் அரைசதம் கடந்தார்.

மறுமுனையில் கோலி, 43 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் எட்டினார்.

இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் குவித்த நிலையில், சதத்தை நோக்கி வேகமாக முன்னேறிய கெயிலை எல்பிடபிள்யு முறையில் அவுட்டாக்கினார் குஜராத் வீரர் பாசில். 38 பந்துகளுக்கு 5 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 77 ஓட்டங்கள் எடுத்திருந்தார் கெயில்.

அவரைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் களம் காண, அடுத்த 3 ஓவர்களிலேயே கோலி ஆட்டமிழந்தார். 50 பந்துகளுக்கு 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 64 ஓட்டங்கள் எடுத்திருந்த அவர், குல்கர்னி பந்துவீச்சில் டுவைன் ஸ்மித்திடம் கேட்ச் ஆனார்.

பின்னர் கேதர் ஜாதவ் களமிறங்கி ஆட, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்கள் எடுத்தது பெங்களூர்.

இதையடுத்து, களமிறங்கிய குஜராத் அணியில் மெக்கல்லம் மட்டும் அதிகபட்சமாக 2 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 72 ஓட்டங்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக, இக்கட்டான இறுதிகட்டத்தில் ஆடிய இஷான் கிஷன் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 39 ஓட்டங்கள் எடுத்தார்.

கேப்டன் ரெய்னா 23 ஓட்டங்கள், ஆரோன் ஃபிஞ்ச் 19 ஓட்டங்கள், தினேஷ் கார்த்திக் 1 ஓட்டம், ஜடேஜா 23 ஓட்டங்களில் வீழ்ந்தனர்.

குஜராத் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

ஆன்ட்ரு டை 6 ஓட்டங்கள், பாசில் ரன்களின்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பெங்களூர் தரப்பில் சாஹல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

38 பந்துகளில் 77 ஓட்டங்கள் விளாசிய கெயில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

குஜராத்திற்கு எதிரான இந்த ஆட்டத்தில் 77 ஓட்டங்கள் விளாசிய கெயில், டி20 கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ஓட்டங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.