The first British player to win the Dubai Open title Murray

துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் அவர் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 45-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

துபையில் நடைபெற்ற துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் முர்ரே 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தினார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரிடம் தோற்ற முர்ரே, வெர்டாஸ்கோவை வீழ்த்தி துபாய் ஓபனில் முதல் முறையாக பட்டம் வென்றுள்ளார்.

வெர்டாஸ்கோவுடன் இதுவரை 14 ஆட்டங்களில் மோதியுள்ள முர்ரே, இப்போது 13-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார்.

வெற்றி குறித்துப் பேசிய முர்ரே, "நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இங்கு முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இறுதிச் சுற்றில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆரம்பத்தில் மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கினாலும், இப்போது சிறப்பாக முடித்திருக்கிறேன்' என்றார்.

துபாய் ஓபனில் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள முர்ரே, அடுத்ததாக இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் களமிறங்கவுள்ளார்.