The famous football player of the Barcelona team joined the club in Japan ... who is he?

பார்சிலோனோ அணியின் பிரபல கால்பந்து வீரர் ஆன்ட்ரெஸ் இனியெஸ்டா ஜப்பானைச் சேர்ந்த விஸெல் கோபே கிளப்பில் இணைந்துள்ளார்.

பார்சிலோனா கால்பந்து கிளப்பில் 22 ஆண்டுகளாக ஆடி வந்தவர் பிரபல கால்பந்து வீரர் ஆன்ட்ரெஸ் இனியெஸ்டா. இவர் ஸ்பெயினின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் ஆவார். 

8 லா லிகா பட்டங்கள், 4 சாம்பியன்ஸ் லீக் பட்டங்கள், ஒரு உலகக் கோப்பை சாம்பியன் பட்டம்போன்றவை இனியெஸ்டா வசம் உள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான இறுதிச்சுற்றில் இனியெஸ்டா அடித்த கோலால் ஸ்பெயின் உலக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அவர் முதலில் சீனாவின் ஷாங்காய் கிளப்பில் சேருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரவில்லை. 

ஆனால், தற்போது ஜப்பானின் கால்பந்து கிளப்பான விஸெல் கோபேவில் இனியெஸ்டா இணைந்துள்ளார். அந்த கிளப்பின் உரிமையாளர் ஹிரோஷி மிக்டானி தனது கிளப்புக்கு இனியெஸ்டாவை வாங்குவதில் உறுதியாக இருந்தார். 

அதன்படி நேற்று நடந்த நிகழ்ச்சியில் விஸெல் கோபே அணியின் சீருடையை இனியெஸ்டா பெற்றுக் கொண்டார். 

விஸெல் கோபே கிளப் ஜப்பானில் லீக் அமைப்பில் 6-வது இடத்தில் உள்ளது. இனியெஸ்டா வருகையை ஏராளமான ஜப்பானியர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.