தரவரிசையில் முதல் 200 இடங்களில் நிலையாக இருக்க முடியாத பட்சத்தில், அங்கிதா ஒலிம்பிக் போட்டியில் எப்படி சிறப்பாக விளையாடுவர் என்று கணித்ததாலேயே பதக்க வாய்ப்புள்ளவர்கள் பட்டியலுக்கு அவரை பரிந்துரைக்கவில்லை என்று  டென்னிஸ் தேசிய கண்காணிப்பாளர் சோம்தேவ் தேவ்வர்மன் கூறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள இந்திய வீரர், வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்க மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், டென்னிஸ் பிரிவில் அந்த நிதியுதவிக்கான பட்டியலில் அங்கிதா ரெய்னா இடம்பெறவில்லை. சர்வதேச தரவரிசையில் இந்திய வீராங்கனைகளில் அங்கிதா முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், அவருக்கு அடுத்தபடியாக உள்ள கர்மான் கெளர் தன்டி, பிரார்த்தனா தோம்ப்ரே உள்ளிட்டோர் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களோடு நான்கு வீரர்களையும் விளையாட்டு அமைச்சகம் மாதாந்திர நிதியுதவி பட்டியலில் சேர்த்துள்ளது.

மகளிர் பிரிவில் அங்கிதாவையும், ஆடவர் இரட்டையர் பிரிவில் திவிஜ் சரணையும் சேர்த்துக்கொள்ளுமாறு அகில இந்திய டென்னிஸ் சங்கம் விளையாட்டு அமைச்சகத்திடம் கோரியுள்ளது.

இந்த நிலையில் அங்கிதா பெயர் விடுபட்டது குறித்து டென்னிஸ் தேசிய கண்காணிப்பாளரான சோம்தேவ் தேவ்வர்மன், "நாட்டில் உள்ள எந்தவொரு வீரர், வீராங்கனை மீதும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை கொண்டதில்லை.

மக்களின் வரிப்பணம் வீரர், வீராங்கனைகளுக்கான நிதியுதவியாக வழங்கப்படுவதால் தகுதியானவர்களை பரிந்துரை செய்வதென மிகவும் கவனமாகச் செயல்பட்டேன்.

அங்கிதாவைப் பொருத்த வரையில், டூர் போட்டிகளில் அவர் மேம்பட்டதாகத் தெரியவில்லை. அவரது ரேங்கிங் மற்றும் கடந்த சில ஆண்டுகளாக அவர் ஆடிய போட்டி முடிவுகளை ஆராய்ந்தால் புரியும். அவர் எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கும் தகுதிபெற்றதில்லை. நேரடியாக பிரதான சுற்று வாய்ப்பும் பெற்றதில்லை.

தரவரிசையில் முதல் 200 இடங்களில் நிலையாக இருக்க முடியாத பட்சத்தில், ஒலிம்பிக் போட்டியில் எப்படி சிறப்பாக விளையாட இயலும்? இதை அடிப்படையாகக் கொண்டே அவர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற முடியாது என கணித்தேன்.

ஒலிம்பிக் போட்டியில் முதல் 50-60 இடங்களில் இங்கும் வீராங்கனைகளே ஒற்றையர் பிரிவில் போட்டியிடுவார்கள். அங்கிதாவைப் போன்ற பலர் வாய்ப்புகளை இழந்துள்ளனர். இது எந்தவொரு தனிப்பட்ட வீரர், வீராங்கனையையோ அவர்களது ரேங்கிங்கையோ பொருத்தது அல்ல. ஒலிம்பிக்கை நோக்கிச் செல்லும் இந்தியாவுக்கு எது சிறந்தது என்பதைப் பொருத்ததாகும்" என்று அவர் கூறினார்.