உலகக் கோப்பை கபடிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேரலாதன்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள திருச்சென்னம்பூண்டியைச் சேர்ந்த விவசாயி தர்மராஜ் - ராஜலட்சுமி தம்பதியின் மகன் சேரலாதன் (41). சிறு வயது முதலே உள்ளூர் கபடி அணியில் சேர்ந்து விளையாடிய இவர், பின்னாளில் தெற்கு இரயில்வே அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த இவர், இப்போது உலகக் கோப்பை கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று அசத்தியுள்ளார்.

இவர் ஏற்கெனவே ஆசிய கோப்பை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளார். மேலும், அண்மையில் புரோ கபடி போட்டியில் பாட்னா அணிக்குத் தலைமை வகித்த இவர் கோப்பையை வென்று கர்சித்தார்.

தற்போது செகந்திராபாதில் வசித்து வரும் இவர் இரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனுராதாவும் இரயில்வேயில் பணியாற்றுகிறார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த சேரலாதன் இடம்பெற்றதால் திருச்சென்னம்பூண்டி கிராமமே ஆனந்தக் கூத்தாடுகிறது.

இதுகுறித்து சேரலாதன் பெற்றோர், “சேரலாதன் சிறு வயது முதலே கபடி ஆடி வருகிறார். சென்ற இடமெல்லாம் கபடி ஆடி வெற்றி பெற்று கோப்பை வாங்கி வருவார். இப்போது இந்தியாவுக்காக ஆடி உலகக் கோப்பையை வென்றிருப்பது எங்களுக்கும், இந்த ஊருக்கும் பெருமையாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சேரலாதனின் நண்பர்கள் சந்திரசேகரன், சாமிதுரை ஆகியோர் தெரிவிக்கையில், "சேரலாதன் படிக்கும்போதே நன்றாக கபடி விளையாடுவார். இளம் வயதிலேயே தலைசிறந்த கபடி வீரர் என பெயர் வாங்கியவர்.

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு காகித ஆலைக்குச் சென்று, அங்கிருந்து தெற்கு இரயில்வே அணிக்குச் சென்றார். அங்கும் சிறப்பாக விளையாடி தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து கொடுத்தார். இப்போது உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். இது எங்கள் ஊருக்கும், தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை' என்று தெரிவித்தனர்.

சேரலாதனின் தம்பி பிரபு விவசாயம் செய்துவருகிறார். மற்றொரு தம்பி கோபு ஐ.சி.எஃப். கபடி அணியில் விளையாடி வருகிறார்.