இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 93.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள் எடுத்தது.
 
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 96.5 ஓவர்களில் 307 ஓட்டங்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 101 ஓட்டங்கள் சேர்த்தார். 

நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி 6, டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
 
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து, 2-ஆம் நாளான சனிக்கிழமை முடிவில் 74.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கிரான்ட்ஹோம் 72 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், 3-ஆம் நாளான நேற்றைய ஆட்டத்தை வாட்லிங் 77 ஓட்டங்கள் , செளதி 13 ஓட்டங்களுடன் தொடங்கினர். 

இதில் கூடுதலாக 8 ஓட்டங்கள் சேர்த்த வாட்லிங் 85 ஓட்டங்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து வந்த ஐஸ் சோதி 1 ஓட்டத்தில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் எட்டினார் டிம் செளதி.
 
எனினும், அவரை கூடுதலாக ஓட்டங்கள் சேர்க்கவிடாமல் போல்டாக்கினார் ஜேம்ஸ் ஆன்டர்சன். கடைசி விக்கெட்டாக டிரென்ட் போல்ட் 16 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்ப, நீல் வாக்னர் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் 6, ஜேம்ஸ் ஆன்டர்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
 
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 29 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது. 3-ஆம் நாளான நேற்றைய் முடிவில் அந்த அணி 66 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.
 
ஜோ ரூட் 30 ஓட்டங்கள், டேவிட் மலான் 19 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர். ஜேம்ஸ் வின்ஸ் 76 ஓட்டங்கள், ஸ்டோன்மேன் 60 ஓட்டங்கள், அலாஸ்டர் குக் 14 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். 

நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 2, செளதி ஒரு விக்கெட் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.