முபாதலா டென்னிஸ் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அறிவித்துள்ளார்.

முபாதலா டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் ராபர்டோ பெளதிஸ்டா அகுட்டுடன் அவர் மோதுவதாக இருந்தது.

இந்த நிலையில், ஆட்டத்துக்கு நான்கு மணி நேரம் முன்பு நோவக் ஜோகோவிச் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியது, "முழங்கையில் கண்டுள்ள காயத்தில் கடந்த சில நாள்களாக வலி இருந்து வருகிறது. பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், போட்டியிலிருந்து விலகி சிகிச்சையை தொடருமாறு மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது. எனவே, முபாதலா டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுகிறேன்.

அடுத்த சீசனுக்கான போட்டித் திட்டங்கள் இதனால் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. வரும் நாள்களில் அதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன்" என்று ஜோகோவிச் கூறியுள்ளார்.

இதையடுத்து, பெளதிஸ்டா அகுட்டுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை களமிறக்க முடிவு செய்யப்பட்டது.