தங்கம் வென்றது வீராங்கனை.. கொண்டாடப்பட்டதோ முதலமைச்சர்..! சர்ச்சையில் சிக்கிய விளையாட்டு ஆணைய தலைவர்
காமன்வெல்த் மகளிர் பாக்ஸிங்கில் தெலுங்கானாவை சேர்ந்த வீராங்கனை நிகத் ஜரீன் தங்கம் வெல்ல, தேசிய கொடியுடன் அவரது புகைப்படத்தை இணைக்காமல், தெலுங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர் ராவ் புகைப்படத்தை வைத்து தெலுங்கானா விளையாட்டு ஆணைய தலைவர் கொண்டாடிய செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், விவாதமாகவும் உருவெடுத்துள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் பர்மிங்காமில் நடந்துவருகிறது. காமன்வெல்த்தில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மிகச்சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்துள்ளனர். பளுதூக்குதல், பாக்ஸிங், மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் பதக்கங்களை குவித்தது.
குறிப்பாக 10ம் நாளான இன்று(ஆகஸ்ட் 7) பாக்ஸிங்கில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர். அந்தவரிசையில், பாக்ஸிங்கில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீனும் தங்கம் வென்றார்.
பாக்ஸிங் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன், அயர்லாந்து வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
இந்த நிகத் ஜரீன் என்ற வீராங்கனை தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்தவர். நிகத் ஜரீன் தங்கம் வென்றதும், அந்த போட்டியை நேரில் பார்த்துக்கொண்டிருந்த தெலுங்கானா விளையாட்டு ஆணைய தலைவர் வெங்கடேஷ்வர் ரெட்டி, நிகத் ஜரீனின் புகைப்படத்தை வைத்து கொண்டாடாமல், தெலுங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர் ராவ் புகைப்படத்தை வைத்து கொண்டாடினார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிற்கு தங்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்ததோ பாக்ஸிங் வீராங்கனை நிகத் ஜரீன். ஆனால் விளையாட்டு ஆணைய தலைவராக இருந்துகொண்டு, அவர் கொண்டாடியதோ, முதலமைச்சர் சந்திரசேகர் ராவை.. இது பெரும் சர்ச்சையாக வெடித்ததுடன், அவரது செயலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விளாசிவருகின்றனர்.
தெலுங்கானா விளையாட்டு ஆணைய தலைவராக வெங்கடேஷ்வர் ரெட்டியை நியமித்தது முதலமைச்சர் சந்திரசேகர் ராவாக இருக்கும். அதனால்தான், தனது விசுவாசத்தை காட்ட அவர் இப்படி செய்திருப்பார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.