நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 

முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. நேப்பியரில் நடந்த முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, மவுண்ட் மாங்கனியில் நடந்த இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலுமே நியூசிலாந்து அணியின் மீது இந்திய அணி முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி ஆடியது. 

இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி சிறப்பாக ஆடியது. குறிப்பாக ஸ்பின் ஜோடியான குல்தீப் - சாஹல் ஜோடி அபாரமாக பந்துவீசி இரண்டு போட்டிகளிலும் தலா 6 விக்கெட்டுகள் வீதம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. பார்ட் டைம் ஸ்பின்னரான கேதர் ஜாதவும் போட்டிக்கு போட்டி ஒரு விக்கெட்டாவது வீழ்த்திவிடுகிறார். 

பேட்டிங்கும் சிறப்பாகவே உள்ளது. ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் அணியில் இடம்பிடித்திருந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் இடைக்கால தடை ரத்து செய்யப்பட்டு நியூசிலாந்து செல்கிறார். எனவே விஜய் சங்கரின் நிலை என்னவென்பது கேள்விக்குறியாக உள்ளது. ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து சென்றாலும், நாளை நடக்க உள்ள மூன்றாவது போட்டியில் அவர் ஆடுவதற்கான வாய்ப்பில்லை. நாளைய போட்டியில் விஜய் சங்கர்தான் ஆட வாய்ப்புள்ளது. எனவே மற்ற எந்த மாற்றமும் இந்திய அணியில் செய்யப்பட வாய்ப்பில்லை என்பதால், முதலிரண்டு போட்டிகளில் ஆடிய அதே அணிதான் மூன்றாவது போட்டியிலும் ஆட வாய்ப்புள்ளது. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), அம்பாதி ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷமி, சாஹல்.