நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகல் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 

முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. நேப்பியரில் நடந்த முதல் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது போட்டி நாளை நடைபெறுகிறது. 

முதல் போட்டியில் பவுலிங், பேட்டிங் என இரண்டிலுமே இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. கடந்த போட்டியில் எந்த தருணத்திலுமே நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தவில்லை. அந்த அணியை போட்டிக்குள்ளேயே வரவிடாமல் இந்திய வீரர்கள் பார்த்துக்கொண்டனர். அந்த போட்டியில் முழுக்க முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. 

வேகப்பந்து வீச்சு, ஸ்பின் பவுலிங், பேட்டிங் ஆகியவற்றில் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஃபீல்டிங்கில் மட்டும் சொதப்பியது இந்திய அணி.

சிறிய இடைவெளிக்கு பிறகு குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி கடந்த போட்டியில் ஒன்றாக ஆடியது. வழக்கம்போலவே இருவரும் இணைந்து நியூசிலாந்து பேட்டிங் ஆர்டரை சிதைத்தனர். ரோஸ் டெய்லர் மற்றும் டாம் லதாம் ஆகிய இரண்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் சாஹல் வீழ்த்தினார். இருவருமே அபாயகரமான பேட்ஸ்மேன்கள். கேன் வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தி தனது விக்கெட் கணக்கை தொடங்கிய குல்தீப் யாதவ், பின்வரிசை வீரர்கள் மூவரை வீழ்த்தி மொத்தம் 4விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

முதல் போட்டியில் ஆடிய அணி, நியூசிலாந்தின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடியது. அந்த அணி நல்ல கலவையிலும் இருந்தது. எனவே இரண்டாவது போட்டியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை. அதே அணியே மீண்டும் களமிறங்கும் வாய்ப்புதான் உள்ளது. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), அம்பாதி ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷமி, சாஹல்.