டிராவிட்டின் பேச்சை அலட்சியப்படுத்தி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அசிங்கப்பட்டுள்ளது. 

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஒரு ரன் எடுக்க முடியாமல் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த தொடரின் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்த ஆஃப்கானிஸ்தான் அணி அருமையாக பந்துவீசி இந்திய அணியை கட்டுப்படுத்தியது.

ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தலாக செயல்பட்டு லீக் சுற்றில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தியது. சூப்பர் 4 சுற்றின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்து கடைசி நேரத்தில் போராடி தோற்றது. 

அந்த அணியில் ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், முகமது நபி ஆகிய மூன்று ஸ்பின்னர்களும் எதிரணியை மிரட்டுகின்றனர். அவர்களின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள எதிரணிகள் திணறுகின்றன. அதனால் 250 ரன்களுக்கு மேல் எடுத்துவிட்டாலே எதிரணியை சுருட்டிவிடுகிறது ஆஃப்கானிஸ்தான் அணி. அதே உத்தியைத்தான் இந்திய அணிக்கு எதிராகவும் பயன்படுத்தியது. 

நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் 7 ரன்களை எடுக்கவிடாமல் ரஷீத் கான் கட்டுப்படுத்தியதால் போட்டி டிரா ஆனது. இந்த போட்டியில் இந்திய அணி அலட்சியமாக செயல்படாமல் இருந்திருந்தால் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியிருக்கலாம். ஆஃப்கானிஸ்தான் அணி தானே என்ற அலட்சியம் தான் இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம். ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் இல்லாமல் இந்த போட்டியை ஆடியிருந்தாலும், அந்த அணி நிர்ணயித்த இலக்கு எட்டக்கூடியதுதான்., ஆனாலும் இந்திய அணி தோற்றதற்கு அலட்சியம் தான் காரணம்.

இது நடக்கும் என்று முன்கூட்டியே டிராவிட் எச்சரித்தார். ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆட்டத்திறனை தொடர்ந்து கவனித்துவரும் டிராவிட், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக எச்சரிக்கையுடன் ஆட வேண்டும் என எச்சரித்திருந்தார். நமது ஏசியாநெட் தமிழ் தளத்திலும் டிராவிட் எச்சரிக்கை விடுத்திருந்தது தொடர்பாக செய்தி (https://tamil.asianetnews.com/sports/rahul-dravid-warning-indian-team-pfg5eu) வெளியிட்டிருந்தோம். ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக ஆடிவருகிறது. எனவே பாகிஸ்தான் அணியின் மேல் மட்டும் மொத்த கவனத்தையும் செலுத்தாமல்  ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் எச்சரிக்கையாக ஆட வேண்டும் என்று டிராவிட் எச்சரித்திருந்தார். 

ஆனாலும் அவரது அறிவுரையை இந்திய அணி செவிமடுக்கவில்லை. அதன் விளைவுதான் இந்த முடிவு.