ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்சில் தமிழக அணி கர்நாடகத்தை விட 64 ஓட்டங்கள் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதியில் கர்நாடகத்துக்கு எதிரான ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 152 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 64 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகம் – கர்நாடகா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தமிழக அணி, பந்துவீச தீர்மானித்தது.

முதலில் பேட் செய்த கர்நாடக அணியில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதத்தை நெருங்கிய கே.எல்.ராகுல், முதல் சதத்தையே முச்சதமாக எட்டி முத்திரை பதித்த கருண் நாயர் ஆகியோர் இருந்தனர்.

இது, தமிழக பந்துவீச்சாளர்களுக்கு சற்று நெருக்கடி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக அணியின் அபார பந்துவீச்சினால் கர்நாடக அணி 37.1 ஓவர்களில் 88 ஓட்டங்களுக்குச சுருண்டது.

தமிழக தரப்பில் அஸ்வின் கிறிஸ்ட் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நடராஜன் 3, கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமிழகம் 36 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் எடுத்தது.

தினேஷ் கார்த்திக் 31, அபினவ் முகுந்த் 3 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழக அணி, எதிர்பாராதவிதமாக 152 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

அபினவ் முகுந்த் தவிர இன்று விளையாடிய மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் அவுட் ஆனார்கள்.

கர்நாடக தரப்பில் ஸ்ரீநாத் அரவிந்த் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 64 ஓட்டங்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.