tamilnadu player vijay shankar get chance in indian cricket team
இலங்கைக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கும் புவனேஷ்குமார், தனது நேர்த்தியான பந்துவீச்சினால், இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டு வருகிறார். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்குமாருக்கு வரும் 23-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
எனவே நவ., 24-ம் தேதி தொடங்க இருக்கும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார். அதன்பிறகான 3வது டெஸ்ட் போட்டியிலிருந்தும் புவனேஷ் விலகியுள்ளார்.
எனவே புவனேஷ்குமாருக்கு பதிலாக, திருநெல்வேலியை சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் சங்கர், 2015லிருந்து இந்தியா “ஏ” அணியில் விளையாடி வருகிறார். மேலும் ரஞ்சி கோப்பையிலும் நல்ல சராசரியை வைத்துள்ளார். 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆல் ரவுண்டரான விஜய் சங்கர், ஐபிஎல்-லில் சென்னை அணிக்காக விளையாடினார். சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
திருமணம் காரணமாக இலங்கைக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டியிலிருந்து புவனேஷ்குமார் விலகியுள்ளதால், அவரது இடத்தில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணியில் உள்ளார். இந்நிலையில், விஜய் சங்கரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர் ஷிகர் தவானும் 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.
முரளி விஜயும் விஜய் சங்கரும் அணியில் சேர்க்கப்பட்டால், அஸ்வினுடன் சேர்த்து மூன்று தமிழக வீரர்கள், ஒரே போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவர். தற்போதைய இந்திய அணியில், வேறு எந்த மாநிலத்திலிருந்தும் மூன்று வீரர்கள் இடம்பெறவில்லை.
