தென் மண்டல சீனியர் கைப்பந்து போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழகமும், மகளிர் பிரிவில் கர்நாடகமும் வாகைச் சூடின.

புதுச்சேரி மாநில கைப்பந்து சங்கம் சார்பில், தென் மண்டல சீனியர் கைப்பந்து போட்டி தொடங்கியது.

கடந்த 24-ஆம் தேதி உப்பளம் இராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் தொடங்கிய இப்போட்டியில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த 12 அணிகள் பங்கேற்று விளையாடின.

சனிக்கிழமை இரவு இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. ஆடவர் பிரிவில் தமிழகமும், புதுவையும் எதிர்கொண்டன.

இதில் தமிழக அணி 25-18, 25-21, 22-25, 25-19 என்ற செட் கணக்கில் புதுச்சேரியை வீழ்த்தி வாகைச் சூடியது.

அதேபோன்று, மகளிர் பிரிவில் கர்நாடகமும், தமிழகமும் மோதின.

இதில் கர்நாடக அணி 25-15, 25-20, 28-26 என்ற நேர் செட்களில் தமிழக அணியை வீழ்த்தி வாகைச் சூடின.

வாகைச் சூடிய ஆடவர், மகளிர் அணிகளுக்கு கோப்பையுடன் தலா ரூ.50 ஆயிரமும், இரண்டாம் இடம் பெற்ற அணிகளுக்கு கோப்பையுடன் தலா ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டன.