சீனாவில் தற்போது உலக காவல்துறை தடகளப் போட்டி நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்தியாவின் சார்பிலும் பல வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்று வருகின்றனர். இந்தநிலையில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 5 ஆயிரம் மீட்டர் வேக நடை போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் ஈஞ்சார் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் பணியிலிருந்து கொண்டே மாநில மற்றும் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் கடந்த 27 ஆண்டுகளாக பங்கேற்று வருகிறார்.

பல்வேறு போட்டிகளிலும் பரிசுகளை அள்ளிக் குவித்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி தற்போது உலக அளவிலான காவல்துறை தடகள போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.