இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில், தமிழக வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

இலங்கையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கையிடம் இந்திய அணி தோற்றது.

அதன்பிறகு வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் கண்ட தோல்விக்கு இலங்கையை நேற்று பழிதீர்த்தது இந்திய அணி. இந்த போட்டியில் தமிழக வீரர்களின் செயல்பாடு மிகச்சிறப்பாகவும் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. 

வாஷிங்டன் சுந்தரும் விஜய் சங்கரும் மிகச்சிறப்பாக பந்துவீசி, இலங்கையின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். தொடக்க ஓவர்களில் அடித்து ஆடி ஆட்டத்தை தொடங்கிய இலங்கையின் ரன் வேகத்தை வாஷிங்டன் சுந்தரும் விஜய் சங்கரும் கட்டுப்படுத்தினர்.

ஒருபுறம் சாஹல், ரன்களை வாரி வழங்கினாலும் சுந்தரும் சங்கரும் சிறப்பாக வீசினர். 4 ஓவர்களை வீசிய வாஷிங்டன் சுந்தர், வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 ஓவர்களை வீசிய விஜய் சங்கர், 30 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். ஷர்துல் தாகூரும் சிறப்பாக பந்துவீசினார். ஆனாலும் ஒவ்வொரு போட்டியிலும் எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்துவதில் சுந்தர் மற்றும் சங்கரின் பங்கு அளப்பரியது. 

அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 152 ரன்களை மட்டுமே எடுத்தது. 153 என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள், ரோஹித், தவான் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற ரெய்னா அதிரடியாக ஆடினார். ஆனால் அவரும் 27 ரன்களில் வெளியேறினார். ராகுலும் 18 ரன்களில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார்.

மனீஷ் பாண்டேவும் தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக ஆடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இதுவரை சரியாக விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தவித்த தினேஷ் கார்த்திக், நேற்றைய வாய்ப்பை பயன்படுத்தி அடித்து நொறுக்கினார். 27 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து இலக்கை விரைவில் எட்ட உதவினார்.

பவுலிங்கில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாக செயல்பட, பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக் மிரட்டினார். இவ்வாறு இலங்கையை பழிதீர்க்க தமிழக வீரர்களின் பங்களிப்பு அளப்பரியது.