இந்தியா - இலங்கை இடையேயான டி20 ஆட்டம் இன்று கொழும்பில் நடைபெறுகிறது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரையும், ஐந்து ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரையும் முழுமையாகக் கைப்பற்றியது.

இந்தியா, இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே தரைமட்டமாக வீழ்த்திய நிலையில், இந்த ஒரே டி20 ஆட்டத்தில் களம் காண்கிறது.

மறுமுனையில், இந்த ஆட்டத்திலாவது வெற்றியைப் பெற்று விடவேண்டும் என்ற கட்டாயத்தோடு களம் காணுகிறது இலங்கை.

இந்திய அணியில் ரோஹித் சர்மா அவருக்கான இடத்தில் நீடிக்க, மிடில் ஆர்டரில் கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே ஆகியோர் தொடருவர். கேதார் ஜாதவ் இதிலும் தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது,

ஹார்திக் பாண்டியா, டி20 ஆட்டத்தில் களம் காண வாய்ப்புள்ளது. பந்துவீச்சைப் பொருத்த வரையில் பூம்ரா தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். சுழற்பந்துவீச்சைப் பொருத்த வரையில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் களமிறங்கலாம்.

தொடர் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை, தனது டி20 அணியில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. சுழற்பந்துவீச்சாளர் ஜெஃப்ரே வான்டர்சே, ஆல்ரவுண்டர் டாசன் சனகா புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயம் காரணமாக ஓய்வில் இருந்த சுரங்கா லக்மல் அணிக்கு திரும்ப, சுழற்பந்துவீச்சாளர் சண்டகன், விஷ்வா, சமீரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.