இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறந்த வீரர் என முன்னாள் வீரர் சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு மூன்று விதமான சாம்பியன்ஷிப்பை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனி, சிறந்த விக்கெட் கீப்பர். டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பிங்கில் தனித்த அடையாளத்தை பெற்றுள்ள தோனி, கீப்பிங்கில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

அடுத்த ஆண்டு உலக கோப்பையுடன் தோனி, அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்பொழுதிலிருந்தே தோனியின் இடத்தை நிரப்புவதற்கான வீரரை அடையாளம் கண்டு வளர்த்தெடுக்க வேண்டிய கடமை இந்திய அணிக்கு உள்ளது.

தோனி பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும், அவரது அனுபவமும் ஆலோசனைகளும் விக்கெட் கீப்பிங்கும் இந்திய அணிக்கு கண்டிப்பாக தேவை. எனவே தோனியின் இடத்தை அவ்வளவு எளிதாக யாராலும் நிரப்பிவிட முடியாது.

தோனியின் இடத்தை பிடிப்பதற்காக, அணியில் நீண்டகாலமாக நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவரும் லோகேஷ் ராகுல், கீப்பிங் பயிற்சி பெற்றுவருகிறார். தற்போது இலங்கையில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் சேர்க்கப்பட்டுள்ள ரிஷப் பண்டும் விக்கெட் கீப்பர் தான்.

இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான இரு போட்டிகளிலும் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தும் பண்ட், அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் சையத் கிர்மானி, ரிஷப் பண்ட் சிறந்த வீரர். ஆனாலும் இளம் வீரராக உள்ள பண்ட், திறமைகளை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம் என தெரிவித்தார்.

மேலும், தோனி இவ்வளவு விரைவாக டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றிருக்க கூடாது. அவரது அனுபவமும் ஆலோசனையும் இந்திய டெஸ்ட் அணிக்கு தேவை. ஆனால் அவசரப்பட்டு தோனி ஓய்வு பெற்றுவிட்டார் என கிர்மானி தெரிவித்தார்.