‘கார் விபத்தில் நான் இறந்துவிட்டதாக பரப்பப்படும் அபாண்டமான செய்திகளை எனது ரசிகர்கள் நம்பவேண்டாம். நான் மிகவும் நலமாகவே இருக்கிறேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார் பிரபல கிரிக்கெட் வீர சுரேஷ் ரெய்னா.

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளப் பக்கங்களிலும் சில யூடியூப் சேனல்களிலும் வதந்தி பரப்பப்பட்டது. இதைப் பார்த்த ரெய்னாவின் நண்பர்கள், உறவினர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். ஆனால் இது முதல் முறை அல்ல இதற்கு முன்னரும் இது போன்ற விபத்துச் செய்திகளில் சிலமுறை சாகடிக்கப்பட்டவர்தான் ரெய்னா.

வதந்தி பரப்பும் வலைதளங்கள் மற்றும்  யூடியூப் சேனல்கள் மேல் புகார் அளித்துள்ளதாகவும் சொல்லும் ரெய்னா , “கடந்த சில தினங்களாக நான் கார் விபத்தில் சிக்கிவிட்டதாக தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த வதந்தி எனது குடும்பத்தையும் நண்பர்களையும் மிகவும் பாதித்துள்ளது. தயவுசெய்து இது போன்ற தவறான செய்திகளைப் புறக்கணியுங்கள். கடவுளின் அருளால் நான் நலமுடன் இருக்கிறேன். அந்த யூடியூப் சேனல்கள் மேல் புகார் அளித்துள்ளேன். விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மோசமான ஆட்டத்தாலும் உடற்தகுதி சோதனையில் தேர்வாகாததாலும் ரெய்னாவுக்கு தொடர்ந்து அணியில் இடம் கிடைக்காமல் உள்ளது. அவர் கடைசியாக கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கலந்து கொண்டார். தற்போது நடந்துமுடிந்த ரஞ்சி கோப்பை தொடரில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடினார். ஆனால், விதர்பா அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணியில் இடம்பெற ரெய்னா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா 768 ரன்கள் எடுத்துள்ளார். 226 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 5,615 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆனால், ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை ரெய்னா எப்போதும் டாப் ஸ்டார்தான். இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக களம் இறங்குகிறார் சுரேஷ் ரெய்னா.