காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியிருப்பது, விஜய் சங்கருக்கு ஆடும் லெவனில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 

இந்திய அணிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு கிடைத்த தரமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அதிரடி பேட்டிங், நல்ல பவுலிங், அபாரமான ஃபீல்டிங் என இந்திய அணியின் முதன்மையான ஆல்ரவுண்டராக திகழ்ந்துவரும் ஹர்திக் பாண்டியாவிற்கு, ஆசிய கோப்பைக்கு பிறகே நேரம் சரியில்லை. 

ஆசிய கோப்பையில் காயமடைந்து தொடரின் பாதியில் வெளியேறிய ஹர்திக் பாண்டியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களை இழந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, பெண்கள் குறித்து இழிவாக பேசிய சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஆஸ்திரேலிய தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சில போட்டிகளை இழந்தார். அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்ற விஜய் சங்கர், சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை உறுதி செய்தார். 

நியூசிலாந்துக்கு எதிராக விஜய் சங்கருக்கு பவுலிங் வீச பெரிதாக வாய்ப்பு கிடைக்காத போதிலும், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விஜய் சங்கர் சிறப்பாக ஆடினார். அதன்மூலம் உலக கோப்பை அணிக்காக விஜய் சங்கரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்க உள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக தொடர் முழுவதிலுமிருந்து விலகியுள்ளார். அதனால் ஆடும் லெவனில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால், இதில் ஆடுவதன் அடிப்படையில் உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளது. 

ஹர்திக் பாண்டியா ஆடியிருந்தால், விஜய் சங்கருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்திருப்பது சந்தேகம்தான். ஆனால் தற்போது ஹர்திக் விலகியுள்ளதால் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான விஜய் சங்கருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும். இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி சிறப்பாக ஆடினால், உலக கோப்பைக்கு பரிசீலனையில் இருக்கும் தனது பெயரை விஜய் சங்கரால் உறுதி செய்ய முடியும். 

உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரில் இப்படி ஆடும் லெவனில் இடம் கிடைத்து, தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைப்பது மிகப்பெரிய விஷயம். அதை விஜய் சங்கர் சரியாக பயன்படுத்தி கொள்கிறாரா என்று பார்ப்போம்.