ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலத்தில் அதிகமாக செலவு செய்யாமல் கையிருப்பில் இருந்த தொகையை வைத்து குறைந்த விலையில் சிறந்த வீரர்களை எடுத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 

ஐபிஎல்லை பொறுத்தமட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை தவிர ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் முக்கியமானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கடந்த சீசனில் அருமையான பவுலிங் அணியாக திகழ்ந்து, மிரட்டலான பேட்டிங் வரிசையை கொண்ட அணிகளை எல்லாம் ஓடவிட்டது சன்ரைசர்ஸ் அணி. 

அந்த அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான டேவிட் வார்னர் கடந்த சீசனில் ஆடாத நிலையில், கேன் வில்லியம்சனின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு இறுதி போட்டி வரை சென்றது. இறுதி போட்டியில் சென்னை அணியிடம் தோற்று கோப்பையை இழந்தது. 

இந்நிலையில், அடுத்த சீசனில் டேவிட் வார்னர் தடை முடிந்து, மீண்டும் அணிக்கு திரும்புவதால் பேட்டிங்கை பொறுத்தமட்டில் கூடுதல் வலுவடையும் சன்ரைசர்ஸ் அணி, நேற்று நடந்த ஐபிஎல் ஏலத்தில் அலட்டிக்கொள்ளாமல் அதிரடி வீரர்களை எடுத்துள்ளது. 

ரூ.9.7 கோடி கையிருப்புடன் 3 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 5 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என்ற நிலையில் ஏலத்திற்கு வந்தது. இருந்த தொகையை வைத்து சிறந்த வீரர்களை எடுத்தது. 

இங்கிலாந்து அணியின் அதிரடி வீரரும் விக்கெட் கீப்பருமான ஜானி பேர்ஸ்டோவை ரூ.2.2 கோடிக்கும் நியூசிலாந்து அணியின் அபாயகரமான அதிரடி வீரர் மார்டின் கப்டிலை அவரது அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது. 

மேலும் சன்ரைசர்ஸ் அணி விடுவித்த ரித்திமான் சஹாவையும் ரூ.1.2 கோடிக்கு மீண்டும் அணியில் எடுத்தது. 

புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், சித்தார்த் கவுல், கலீல் அகமது, முகமது நபி, ஸ்டேன்லேக் என மிகச்சிறந்த பவுலர்களை கொண்டுள்ள சன்ரைசர்ஸ் அணி, டேவிட் வார்னர், வில்லியம்சன், கப்டில், பேர்ஸ்டோ, யூசுப் பதான், மனீஷ் பாண்டே என அதிரடி பேட்ஸ்மேன்களையும் பெற்றிருப்பதால் மிகச்சிறந்த அணியாக அடுத்த சீசனில் களம் காண உள்ளது. 

கடந்த சீசனில் பவுலிங் அணியாக மட்டுமே திகழ்ந்த சன்ரைசர்ஸ் அணி, அடுத்த சீசனில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிரட்டும் வலுவான அணியாக களம் காண்கிறது. 

சன்ரைசர்ஸ் அணி தக்கவைத்த வீரர்கள்:

டேவிட் வார்னர், வில்லியம்சன், யூசுப் பதான், மனீஷ் பாண்டே, புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், முகமது நபி, பில்லி ஸ்டேன்லேக், கலீல் அகமது, தீபக் ஹூடா, ஷாகிப் அல் ஹாசன், டி நடராஜன், சந்தீப் ஷர்மா, கோஸ்வாமி, ரிக்கி பூய், பாசில் தம்பி, சித்தார்த் கவுல்.

ஷிகர் தவானை டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டு டெல்லியிடமிருந்து விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, நதீம் ஆகிய மூவரையும் பெற்றுக்கொண்டது. 

ஏலத்தில் எடுத்த வீரர்கள்:

ஜானி பேர்ஸ்டோ, ரித்திமான் சஹா, மார்டின் கப்டில்.