சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது. 

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி நேற்று நடைப்பெற்ற அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா முன்னிலையில் இருந்தது ஆனால், பிற்பாதியில் மீண்ட அயர்லாந்து, இந்தியாவின் தடுப்பாட்டத்தை தகர்த்து வெற்றி அடைந்தது. 

அயர்லாந்துக்கான கோல்களை ஷேன் ஓ டோனோக், சீன் முர்ரே, லீ கோலெ ஆகியோர் அடித்தனர். இந்தியாவுக்கான கோல்களை ரமன்தீப் சிங், அமித் ரோஹிதாஸ் அடித்தனர். 

இந்த ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, வருண் குமார் உதவியுடன் பந்தை கோல் போஸ்டுக்குள் விரட்டினார் ரமன்தீப் சிங். தொடர்ந்து கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பை வருண் குமார் வீணடித்தார்.

ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் களநடுவர் தவறுதலாக அயர்லாந்துக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கியதை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்தது. இதையடுத்து அயர்லாந்துக்கான பெனால்டி வாய்ப்பு திரும்பப் பெறப்பட்டது. 

இந்த நிலையில் 19-வது நிமிடத்தில் இந்திய வீரர் ரமன்தீப் சிங்குக்கு பச்சை அட்டை காண்பிக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். 24-வது நிமிடத்தில் அயர்லாந்தின் ஷேன் ஓ டோனோக் ஃபீல்டு கோல் அடித்து அணியின் கணக்கை தொடங்கினார். 

அதற்கு பதிலடியாக 26-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அமித் ரோஹிதாஸ் கோலடிக்க, முதல் பாதி முடிவில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றது. 

ஆட்டத்தின் 2-வது பாதியில் ஆக்ரோஷம் காட்டிய அயர்லாந்து, 36-வது நிமிடத்தில் சீன் முர்ரே அடித்த கோலால் ஆட்டத்தை சமன் செய்தது. அதனைத் தொடர்ந்து 42-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பிலும் அந்த அணியின் லீ கோலெ கோலடித்தது. 

அதனைத் தொடர்ந்து 3-2 என கணக்கில் அயர்லாந்து முன்னிலை பெற்றது. கோல் வாய்ப்புகள் கிடைக்காததால் இந்திய அணி இறுதியில் வீழ்ந்தது. 

இந்தப் போட்டியில் அயர்லாந்துக்கு இது முதல் வெற்றியாகும். அதேபோல, ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு எதிராக அயர்லாந்து பெற்றுள்ள முதல் வெற்றியும் இதுவேயாகும். 

தற்போது பதக்க சுற்றுகளுக்கான வாய்ப்பை இழந்த இந்தியா 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் இன்று விளையாடுகிறது.